Tuesday, November 23, 2010

காதல் என்பது..... பாகம்-2

குமாருக்கு பல விஷயங்கள் புதிராகவே இருந்தன. தியாகுவும் ரூபாவும் அந்த அளவு அன்னியோன்யமாக இருந்ததுபோல் தெரியவில்லை. ஒரு உணர்ச்சிவசப்படலில் காதலுக்காக தற்கொலை முடிவு எடுப்பது எங்கும் நடப்பதுதான். ஆனால் ஒரு வருடம் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டு சரியாக அந்த நாளில் இறப்பது......

தியாகுவிற்கு அந்த வயதில் வந்தது காதல் இல்லாமல் வெறும் இனக்கவர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனால் அவன் அன்பு உண்மையானது என்று புரிகிறது, அதற்காக அவன் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்றாலும் கூட....

இந்த சம்பவம் நடந்து கிட்டதட்ட 8 வருடங்கள் கழித்து மீண்டும் குமாரின் மனதில் அலைபாய காரணம் என்ன?


--------------------------------

குமாரின் டைரிக் குறிப்பு - 2


அதே 7ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம். பள்ளியில் காதலைப் பற்றி ஏற்பட்ட ஆர்வம் என் மனதில் இருந்துகொண்டே இருந்தது. எனக்கு காதலிக்க பிடிக்கவில்லை, தைரியமில்லை என்றாலும் மற்றவர்களின் கதைகளை கேட்கும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. காதல் வதந்திகள் எனக்கு பிடித்திருந்தன.


நாங்கள் அப்போது குடியிருந்த வீடு ஒரு ஒண்டுக் குடித்தனம், சிறு சிறு வீடுகள். அதில் எனக்கு முதலில் நட்பான பெண் சொப்னா. அதே போல் நட்பான ஆண் ஷியாம். இவர்கள் இருவரும் வயதில் என்னை விட பெரியவர்கள் ஆனால் வா போ என பேசியே பழகுவோம். எனக்கு அப்போது அவர்கள் இருவர்தான் நண்பர்கள். உற்ற நண்பர்கள்.


ஒரு நாள் நானும் ஷியாமும் எங்கள் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு காதல் காட்சி வந்தது. உடனே ஆர்வம் எழுந்தது. நான் அவனிடம் கேட்டேன். “ஷியாம், நீ யாரையாவது காதலிக்கிறாயா?”


”இல்லையே”


”அப்படி காதலிப்பதாக இருந்தால் யாரை காதலிப்பாய்?” இந்த கேள்வியை நான் கேட்டிருக்க கூடாது. அது நான் செய்த பெரிய தவறாக இன்று வரை நினைக்கிறேன். ஷியாம் யோசித்தான் அவன் வயது பெண்கள் மூவரை தேர்ந்தெடுத்து அதில் ஒருவரை இறுதியாக முடிவு செய்தான். அவன் சொன்ன பதில் “சொப்னா” ஷியாம் சொப்னாவை காதலிக்க ஆரம்பித்தான். அவன் காதலை சொல்ல நாள் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்கோ சுவராசியமாக இருந்தாலும் எங்கே போய் முடியுமோ என்ற பயமும் இருந்தது.


ஒருநாள் நான், ஷியாம், சொப்னா மூவரும் தனியாக விளையாடி கொண்டிருந்தோம். வீட்டில் வேறு யாருமில்லை. விளையாடிக் கொண்டிருக்கும்போது ஷியாம் சொப்னாவிடம் ”நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான்.


எனக்கு பக்கென்று இருந்தது. என்ன இவன் இப்போது சொல்ல போகிறான என பார்த்து கொண்டிருக்கும்போதே ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என எழுதி அவளிடம் தந்தான். தந்துவிட்டு ஓடி விட்டான். எனக்கு கோபமாக வந்தது என்ன இவன் இதற்கே இப்படி பயப்படுகிறான்? சொப்னாவோ அதற்கு மேல் பேப்பரை காண்பித்து இது என்ன என்று என்னிடமே கேட்கிறாள். என் ஆத்திரம் அதிகமானாலும் சொன்னேன், ஷியாம் சொப்னாவை காதலிக்கிறான் என...


------------------------------------------

சொப்னாவும் ஷியாமை காதலிக்க ஆரம்பித்தாள். அந்த இளம்பருவத்தில் அதுதான் காதாலா என தெரியாமல் பழகினர் அவர்கள். நானும் அதற்கு ஒரு உடந்தையாய் இருந்தது தவறு என இப்போது உணர்ந்தாலும் அப்போது எனக்கு அது பிடித்திருந்தது. பெரும்பாலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேசுவது அவர்கள் வாடிக்கை. நாளடைவில் அவர்கள் காதல் தீண்டல்களுடன் தொடர்ந்தை பின்னாளில் அறிந்தேன். இப்படியாக அவர்களின் காதல் இனிமையாக நாளொருமேனியாக வளர்ந்து வந்தது. 


அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும். சண்டைக்கான காரணம் ஒன்றுமில்லாமல் இருக்கும். சிறுவர்கள் போல இவன் என்னை திட்டி விட்டான் அவள் என் மீது கோபப்பட்டாள் என சண்டை இருக்கும். ஆனால் நான் இனி அவனிடம்/அவளிடம் பேசவே மாட்டேன் என்கிற மாதிரி சொல்வார்கள். நான் அவர்களை சமாதானப்படுத்துவேன்.
பிறகு வழக்கம்போல் பேச, பழக தொடங்கி விடுவார்கள்.


அவர்களின் காதல் அவர்களின் இரு வீட்டிற்கும் அரசல்புரலசலாக தெரியுமென நினைக்கிறேன். ஆனால் எந்த பிரச்சினையும் வந்ததில்லை. நாட்கள் சென்றன. அமைதியான இரவுகளில் நானும் ஷியாமும் மாடியில் படுத்துக் கொண்டிருக்கும்போது தங்கள் எதிர்காலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென ஷியாம் சொல்வான். எனக்கு தூக்கம் வந்தபோதும் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருப்பேன். அவர்களின் காதலை நானும் ஆழமாக ரசிக்க தொடக்கி விட்டேன். அவர்களை விட அதிகமாகவே அவர்கள் ஒன்று சேர வேண்டும் என நினைத்தேன்.


அவர்கள் காதல் 6-7 வருடங்கள் முடிந்திருந்த நிலையிலேயே நாங்கள் அந்த ஒண்டுகுடித்தன வீட்டில் இருந்து காலி செய்து விட்டோம். ஒன்றாக இருந்த நாங்கள் பிரிந்தோம். ஆளுக்கொரு பக்கம் என்றாலும் ஒரே ஏரியாவில் அருகருகில்தான் இருந்தோம். ஆனால் அவர்கள் சந்திப்பு இப்போதெல்லாம் வீட்டில் நிகழாததால் எனக்கு தெரிந்தும் தெரியாமலும் பல முறையில் வெளியில் சந்தித்திருக்கிறார்கள். வெளி இடங்களுக்கு சென்று வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போதும் அவர்களுக்குள் சில விளையாட்டுத்தனமான சண்டைகள் வரும். வழக்கம்போல் நானே சமாதானப்படுத்துவேன்.


கிட்டதட்ட 8 வருடங்கள் அவர்கள் காதல் தொடர்ந்தது. டீன் ஏஜ் வயதில் ஆரம்பித்த அவர்கள் காதல் இப்போது நன்கு வளர்ந்திருந்தது. அவர்கள் இப்போது திருமண வயதை எட்டி இருந்தனர். நிச்சயம் அவர்கள் காதலை அவர்கள் வீட்டில் ஒத்துக் கொள்ள மாட்டார்கள், குறிப்பாக சொப்னா வீட்டில். அதனால் அவர்கள் இருவரும் தம் திருமணம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என திட்டமிட ஆரம்பித்திருந்தனர்.


அவர்கள் வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்ந்து இணைந்து வாழ்வார்கள் என நான் சந்தோசமாக இருந்தேன். என் உற்ற நண்பர்கள் இருவர் வாழ்க்கையில் இணைந்தால் எனக்கு மகிழ்ச்சிதானே. பல சமயம் என் கனவுகளில் அவர்களின் வாழ்க்கை வந்தது. அவர்கள் திருமணத்திற்கு தயாராக போகிறார்கள் என நான் நினைத்து கொண்டிந்தேன், காலம் என்னை பார்த்து சிரிப்பதை அறியாமல்.....


----------------------------------------

அப்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனது. மருத்துவமனையில் சேர்ந்தபின் மிக மோசமான நிலை என தெரிந்தது, ஏறக்குறைய உயிருக்கு ஆபத்தான நிலை. அதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற மாதக் கணக்காகி விட்டது. ஆனால் மருத்துவமனையில் இருந்தபோது ஷியாம், சொப்னா இருவரும் வந்து பார்க்கவில்லை. அதற்காக நான் கவலைப்பட வில்லை. அவர்கள் காதல் என்ன ஆனது என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


உடல்நிலை சரியாகி வீட்டிற்கு சென்ற பின் ஒரு நாள் சொப்னாவை சந்தித்தேன். இனிமேல் ஷியாமிடம் பேச மாட்டேன், எல்லாம் முடிந்தவிட்டது என்றாள். எனக்கு அதிர்ச்சியாகி என்னவென்று கேட்டேன். ஷியாமை குறைகூறி ஏதோ சண்டை என்றாள். அவன் ஏதோ திட்டிவிட்டதாக மோசமாக பேசியதாக கூறினா.ஷியாமை தொடர்புகொண்டு கேட்டபோது அவன் சொப்னாவை குறை கூறினான். ஆனால் அவனும் பேச மறுத்தான்.


எனக்கு கோபம்தான் வந்தது. என்ன இவர்கள் 23 வயது ஆன பின்னும் முதிர்ச்சியே இல்லையா? இத்தனை வருடம் காதலித்த பின்னும் சண்டை போட்டு கொள்கிறார்களே. எப்படியோ அவர்களை சமாதான படுத்த முயன்றேன். ஷியாம் ஒருவழியாக சமாதானமாகினான். ஆனால் சொப்னா விடாப்பிடியாக இருந்தாள். அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்துக் கொண்டால் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தேன். கொஞ்ச நாட்களாக சொப்னாவை தொடர்புகொள்ள முடியவில்லை. ஷியாம் அடிக்கடி என்னை வந்து கேட்டான், ஆனால் என்னால் பேச முடியாத போது என்ன செய்வது? யோசித்து கொண்டிருந்த நாட்களில் ஒரு நாள், ஷியாமே ஒரு தகவலோடு வந்தான். “சொப்னாவிற்கு அவள் அத்தை பையனுக்கும் திருமணம் நடக்க போகிறதாம்!” எனக்கு பலத்த அதிர்ச்சி! ஒருவேளை அவள் வீட்டிற்கு தெரிந்து இந்த ஏற்பாடா? குழப்பமாக இருந்தது. தன் நிச்சயதார்த்த பத்திரிக்கை வைப்பத்தற்காக என் வீட்டிற்கு சொப்னா தன் தாயுடன் வந்திருந்தாள். அப்போது பேசினேன்.


”நான் என் அத்தை பையனை கல்யாணம் பண்ணிக்க போறேன். எனக்கு அவரை ரொம்ப பிடிச்சுருக்கு. எப்ப கல்யாணம் நடக்குமோ என காத்திருக்கேன்!”


இது அவள் என்னிடம் பேசியது நான் பதில் பேசவில்லை. வாழ்த்து சொல்லி அனுப்பினேன். ஷியாமை எப்படி மறந்தாள் அவள்? அவள் வீட்டிற்கு அவர்கள் காதலால் எந்த பிரச்சினையும் வராதபோது ஏன் இந்த முடிவு? ஷியாமை யோசித்தேன் - அவன் இப்போது ஏதோ சிறுசிறு வேலைகள் செய்து வருகிறான். ஆனால் சொப்னாவின் அத்தைப் பையனுக்கு சொந்தமாக கடை உள்ளது. கடைசி நேரத்தில் சினிமாபோல் ஏதாவது திருப்பம் வருமென நினைத்தேன். ஒன்றும் நடக்கவில்லை. 


கடைசியாக சொப்னாவின் திருமணத்திற்கு 1 வாரம் முன்பு அவர்கள் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்தேன். அவன் அவளுக்கு வாழ்த்து சொன்னான். நானும் சொன்னேன். நான் ரசித்த அவர்கள் காதல் எங்கோ கரைந்துபோனது.  அன்றிரவும் நான் உறங்கவில்லை. 

-----------------------------------

சொப்னா திடீரென ஏன் மாறிப்போனாள்? காதலிக்க எதுவும் தேவையில்லை. ஆனால் திருமணத்திற்கு அப்படியில்லை என்றா? ஷியாமும் ஏதோ காதல் தோல்வி என உருகவில்லை. இதோ இன்று அவனும் ஒரு திருமணத்திற்கு தயாராகி விட்டான். அவர்கள் இருவருமே வெறும் உடல் தீண்டல்களுக்காக, உடல் கவர்ச்சியினால் காதலித்திருக்கிறார்கள். 8 வருடம் ஆனால் என்ன, அவர்களிடம் உண்மையான அன்பு இருக்க வில்லை என குமாரால் புரிந்துகொள்ள முடிந்தது. அதுதான் தியாகு-ரூபவை ஞாபகப்படுத்தியது. தோல்வியில் முடிந்த இரண்டு காதல்களிலும் மோசமான முடிவே இருந்தன. ஆனால் ஒன்றில் அறியா பருவத்திலும் உண்மையான அன்பு இருந்தது. ஒன்றில் வயது ஏறிய போதும் வெறும் உடல் கவர்ச்சிதான் இருந்தது.

**************************


இந்த இரு சம்பவங்களும் சொல்ல காரணம். இப்பொதெல்லாம் டீன் ஏஜ் வயதில் காதல் வருவது இயல்பாகி விட்டது. பல நேரங்களில் இதன் முடிவு தவறாகி போகிறது. வாழ்க்கை சீரழியும் நிலை கூட ஏற்படுகிறது. அறியாப் பருவத்தில் ஓடிப் போகும் காதல்களும் உள்ளன. இதில் சும்மா டைம்பாஸாக காதலிப்பவர்களும் உண்டு!! இங்கே வழிகாட்டல் என்பது பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் முழுமையாக செய்யப்படுவதில்லை. மேலும் உடனிருக்கும் நண்பர்களும் இங்கே தவறான வழிகாட்டல்களையே செய்கிறார்கள்.


காதல் என்பது என்ன என்று என்னால் இன்றுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் அதன் மீதான ஆர்வம் சுத்தமாக வடிந்து விட்டது. வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது மற்றவகளின் வாழ்க்கையை நீ தீர்மானிக்க முடியாது. அதேபோல் எந்த தவறையும் என்றும் ஆதரிக்காதே!


மேற்கண்ட இரு சம்பங்களும் என் வாழ்க்கையில் நடந்தவைதான்! ஆம் அந்த குமார் நான்தான்!


15 comments:

 1. அருமை...அருமை......எஸ். கே. பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அருமையான நிகழ்வு நண்பா!
  காதல்!
  ஏக்கம் துக்கம் கலந்தது
  ஆம் உண்மை தான்
  மரணத்தை போல!

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. நல்ல பகிர்வு.... நீங்க எப்டி?

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு! ஆமா... குமார் என்ன பண்ணினார்? அத சொல்லுங்க! :-)

  ReplyDelete
 5. //அவர்களின் காதலை நானும் ஆழமாக ரசிக்க தொடக்கி விட்டேன். அவர்களை விட அதிகமாகவே அவர்கள் ஒன்று சேர வேண்டும் என நினைத்தேன்.///

  உண்மைலேயே எனக்கும் இத படிக்கும் போது நான் கூட அப்படித்தான் நினைக்கிறேன் ..!

  ReplyDelete
 6. //அறியாப் பருவத்தில் ஓடிப் போகும் காதல்களும் உள்ளன. இதில் சும்மா டைம்பாஸாக காதலிப்பவர்களும் உண்டு!! இங்கே வழிகாட்டல் என்பது பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் முழுமையாக செய்யப்படுவதில்லை. மேலும் உடனிருக்கும் நண்பர்களும் இங்கே தவறான வழிகாட்டல்களையே செய்கிறார்கள்.//

  ரொம்ப சரியா சொன்னீங்க ..!! நானும் அதைத்தான் பல இடத்துல சொல்லிட்டு வரேன் ..!!

  ReplyDelete
 7. அருமையான பதிவு, அதுவும் உங்க வாழ்க்கை.

  ReplyDelete
 8. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...//
  ரொம்ப நன்றிங்க!

  //S Maharajan said...//
  மிக்க நன்றிங்க!

  //Arun Prasath said...//
  ரொம்ப நன்றி! அதெல்லாம் ஒரு காலம்!

  //ஜீ... said...//
  ரொம்ப நன்றி! குமார் இப்போ எதுவும் பண்ணலை!:-)

  //ப.செல்வக்குமார் said...//
  உண்மைதான் நண்பா!

  //வெறும்பய said...//
  இதெல்லாம் நடந்து 3-4 வருஷம் ஆச்சு நண்பா!

  //KANA VARO said...//
  மிக்க நன்றிங்க!

  ReplyDelete
 9. ரொம்ப அருமை...

  ReplyDelete
 10. சுவாரஸ்யமான நடை. மேலும் தொடர வாழ்த்துகள்! இப்படிக்கு nanbendaa.blogspot.com and madrasbhavan.blogspot.com

  ReplyDelete
 11. உண்மையாகவே நல்லப்பதிவு.. எழுத்துநடை மிகவும் கவர்ந்துள்ளது.. கவர்ந்தமைக்கு நன்றி..!

  வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 12. அருமையான பதிவு. காதல் ஏக்கம் விறு.. விறு.. படித்து முடித்ததே தெரியாமல்..

  ReplyDelete
 13. சுவாரசியமான பதிவுகள்.
  இந்தக்காலத்தில் இல்லை, எந்தக்காலத்திலும் காதல் உணர்வுகள் பதின்ம வயதில் தொடங்குகின்றன... காதலுக்கு வயதில்லை. சிலசமயம் காதல் என்பதே நாற்பது வயதுக்கு மேல் தான் நிறைய பேருக்குப் புரிகிறது!

  உடல் தீண்டலுக்காகக் காதலித்தால் தவறு என்பது போல் சொல்லியிருக்கிறீர்களா? புரியவில்லை. காதல் உணர்வு என்பதும் நிலையில்லாதது தானே? காதல் உணர்வுகளும் காலத்தால் மாறக்கூடியவை தான்.

  ReplyDelete
 14. அருமையான பதிவு சேர்...

  ReplyDelete