Tuesday, November 23, 2010

காதல் என்பது..... பாகம் 1

காதல் என்றால் என்ன?

காதல் என்பது....
ஒரு இனிமையான அனுபவம்
ஒரு அற்புதமான உணர்வு
அதெல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்
காமம்தான் காதல்
கல்யாணத்து பிறகு வருவதுதான் உண்மையான காதல்

இப்படி ஆளாளுக்கு சொல்லிகிட்டே போகலாம்....
ஆனால்.....


*********

குமாரின் டைரிக் குறிப்பு-1

அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். பொதுவாகவே நான் கொஞ்சம் மூடி டைப். அதிகமாக யாரிடமும் பேச மாட்டேன். சட்டென்று எல்லோரிடமும் சகஜமாக பழகுவது எனக்கு கடினம். அதனால் நான் மற்றவர்களிடமிருந்து ஓரளவு விலகி இருப்பது போன்ற சூழல் இருந்தது. அப்போது எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று அதிகமில்லை 4 பேர் தான். அதில் ஒருவன் பெயர் பரமேஷ். ஆனால் அவனுக்கு என்று ஒரு தனி கேங் இருந்தது. அவர்கள் எல்லோரும் அடிக்கடி கூடி பேசிக் கொள்வார்கள். அதில் கொஞ்சம் வாட்டசாட்டமாக நல்ல உடற்கட்டுடன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் தியாகு. அவனிடம் நான் அதிகம் பேசியதில்லை.


எங்கள் வகுப்பில் மாணவர்கள் உட்காரும் விதம் கொஞ்சம் வித்தியாசமானது. ‘ப’ வடிவில் டெஸ்க்குகள் இருக்கும். அதில் இரு பக்கமும் பையன்களும் நடுவிலும் கீழேயும் பெண்களும் அமர்வார்கள். தியாகு எனக்கு எதிர்பக்கத்தில் அமர்ந்திருப்பான். பரமேஷ் எனக்கு இரண்டு பையன்கள் தள்ளிதான் உட்காருவான்.


அரையாண்டு பரீட்சை முடிந்து விடுமுறை முடிந்து பள்ளிக்கு சென்ற நேரம். ஒரு நாள் எங்கள் டீச்சர் வேறொரு டீச்சருடன் வகுப்பு வாசலுக்கு வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். நான் வகுப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டே கதை எழுதுகிறேன் என நோட்டில் கிறுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது தியாகும் பரமேஷும் சைகையில் ஏதோ பேசிக் கொண்டிருப்பதை கவனித்தேன். அவர்கள் பேசுவது எனக்கு புரியவில்லை. திடீரென ஒரு பர்ஸை அங்கிருந்து தூக்கிப் போட்டான். அதை பரமேஷ் கேட்ச் பிடித்தான். பிறகு என்ன செய்தான் என எனக்கு தெரியவில்லை. ஒரு இங்கிலீஷ் கைடை என்னிடம் பரமேஷ் தந்தான். அதை எனக்கு அருகில் கீழே உட்கார்ந்திருந்த ஒரு பெண்ணிடம் தரச் சொன்னான்.


எனக்கு புரியவில்லை. அந்த பெண் எதையும் கேட்கவே இல்லை. அப்புறம் எதற்கு கைடு? நான் எதையும் கேட்கவில்லை. அந்த பெண்ணிடம் கைடை கொடுத்தேன். அந்த பெண் அமைதியாக வாங்கிக் கொண்டு கொஞ்ச நேரத்தில் கைடை கொடுத்தது. நான் அதை பரமேஷிடம் கொடுத்தேன். அவன் அதை எடுத்துக் கொண்டு தியாகுவிடம் சென்று விட்டான். பரமேஷ், தியாகு, இன்னும் சில நண்பர்கள் எதையோ பார்த்து சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.


எனக்கு ஆர்வம் அதிகமானது தெரிந்துகொள்ள ஆசை ஆனால் கேட்க தயக்கம்? எனக்கு அருகில் இருந்த குமார் என்ற நண்பனிடம் இது பற்றி கேட்டேன். அவன் முதலில் சொல்லவில்லை. ஆனால் பிறகு சொன்னான். தியாகுவும் அந்த பெண்ணும் காதலிக்கிறார்களாம். தியாகு தன் போட்டோவை கைடு மூலம் அந்த பெண்ணிடம் தந்திருக்கிறான். அந்த பெண்ணும் தன் ஃபோட்டோவை தந்திருக்கிறாள்.


அதுவரை காதல் என்பதை பற்றி நான் நினைத்ததே இல்லை. ஆனால் அதற்கு பிறகு அந்த வயதில் எனக்கு அதன் மீது ஆர்வம் அதிகமானது. எனக்கு காதலிக்க பிடிக்கவில்லை என்றாலும் மற்றவர்கள் செய்வதை கவனிப்பது எனக்கு சுவாரசியமாகதான் இருந்தது. அதன் பின் அவர்களது பரிமாற்றங்கள், பரமேஷும் யாருக்கோ ரத்தத்தால் கடிதம் எழுதியது என பல விஷயங்களை கவனித்தேன். நான் எதையும் அவர்களிடன் கேட்க மாட்டேன். அவர்களும் என்னிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால் முடிந்தவரை என்னவென்று கவனிப்பேன், அவர்கள் சந்தோசமாக சிரித்து எதைப் பற்றியோ பேசுவதை அமைதியாக ஊமைப்படத்தை ரசிப்பது போல கவனிப்பேன்.


----------------------


எட்டாவது சென்ற பிறகு தியாகு எனக்கு கொஞ்சம் நெருங்கிய நண்பனான். எனக்கு அருகில் உட்காருவான். நன்றாக பேசுவான். உதவிகள் செய்வான். எனக்கு அவனை பிடித்து போனது. அவனும் அந்த பெண்ணும் பேசி நான் பார்த்தே இல்லை. ஆனால் அவர்களுக்கு காதல் இருந்தது. அந்த பெண்ணை பற்றி நான் எதுவுமே சொல்லவில்லை இல்லை? அந்த பெண்ணின் பெயர் ரூபா. அமைதியான பெண். நன்றாக படிப்பவள்.


நான் படித்த பள்ளியில் எட்டாவது வரை மட்டுமே இருந்தது. எனவே அதுதான் அங்கே கடைசி வருடம். அதனால் நான் என் படிப்பை கடுமையாக படித்துக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம். தியாகு அடிக்கடி தன் நண்பர்களுடன் கூடி பேசுவது குறைந்திருந்தது. எனக்கு காரணம் தெரியவில்லை.


காலாண்டு பரீட்சை முடிந்து விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற போது ரூபா பள்ளிக்கு வரவில்லை. ஒரு வாரம் ஆகியும் பள்ளிக்கு வரவில்லை. தியாகுவும் சில நாட்கள் பள்ளிக்கு வரவில்லை. நான் காரணம் புரியாமல் வழக்கம்போல் குழம்பிக் கொண்டிருந்த போது, ஒரு பரமேஷ் பேசிக் கொண்டிருந்ததை கேட்டேன். அதன் மூலம் தெரிந்தது. ரூபா எங்கள் தமிழாசியரின் தம்பி பெண். அவர்களின் வீட்டில் காதல் விஷயம் தெரிந்ததால், ரூபாவை அருகில் இருந்த வேறு பள்ளிக்கு மாற்றி விட்டார்கள்.


எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சில நாள் கழித்து தியாகு பள்ளிக்கு வந்தான். முன்போல் கலகலப்பாக இருப்பதில்லை என்றாலும் சாதாரணமாகவே இருந்தான். நான் அவனிடம் எதையும் கேட்கவில்லை.


நாட்கள் சென்றது முழு ஆண்டு பரிட்சை முடிந்து, அந்த பள்ளி வாழ்க்கை முடிந்தது. விடுமுறையில் நான் வீட்டில் இருந்த சமயம் ஒரு நாள் பரமேஷ் என்னை பார்க்க வந்தான். அந்த வருட ஆண்டு விழாவிற்கு நான் செல்லவில்லை. எனக்கு கிடைக்க வேண்டிய ஒரு பரிசை ஆசிரியர்கள் தரச்சொன்னதாக சொன்னான். பரிசை வாங்கிக் கொண்டு நண்பர்கள் பற்றி விசாரித்தேன்.


அவன் மவுனமாக இருந்தான். பின் சொன்னான், “ரூபா இறந்துட்டாடா!”


நான் அதிர்ச்சியானேன் ”என்னடா சொல்ற?”


”ஆமாம் ரூபா இறந்துட்டா, கொஞ்ச நாள் முன்னாடி ஊட்டிக்கு போன பஸ் மலையிலிருந்து கவிழ்ந்ததா பேப்பர்ல கூட வந்ததே, அதில் அவளும் இருந்தாள்”


எனக்கு பலத்த அதிர்ச்சி எதுவும் பேச தோன்றாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.


”நாங்க எல்லோரும் அவள் இறுதி சடங்குக்கு போனோம். தியாகும் வந்தான்.” கொஞ்சம் நிறுத்தி விட்டு தொடர்ந்தான். “அவன் அன்னிக்கு பூச்சி மருந்து குடிச்சிட்டான். எப்படியோ காப்பத்திட்டாங்க”


எனக்கு இந்த விஷயங்கள் மிகவும் சோகத்தை அளித்தன. பரமேஷ் சென்ற பிறகு இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.


------------------------------------------------------


பள்ளியில் கடைசியாக பார்த்த பின் தியாகுவை நான் பார்க்கவே இல்லை. பள்ளி நண்பர்களின் தொடர்பும் இல்லை. இப்போது புதிய பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் பள்ளிக்கு சென்று கொண்டிருக்கும்போது எதேச்சையாய் தியாகுவை பார்த்தேன்.


தியாகு தூரத்தில் ஒரு வீட்டை காட்டி அது அவன் வீடு  என கூறினான். தான் இப்போது படிக்கவில்லை என்றும் அவன் அப்பாவின் மளிகை கடையில் வேலை செய்வதாகவும் கூறினான். அதன் பிறகு அவ்வப்போது பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் அவன் வீட்டை பார்த்துக் கொண்டே செல்வேன். எப்போதாவது அவன் வெளியில் நிற்பான் என்னை பார்த்து என் அருகில் வருவான் கொஞ்சம் பேசுவோம், பிறகு நான் செல்வேன். ஆனால் அவனிடம் என்றுமே ரூபாவை பற்றி கேட்டதில்லை.


நான் 9ஆம் படித்த வருடத்தில் அவனை அதிகபட்சமாக 6-7 தடவை பார்த்திருப்பேன். 10வது சென்ற பிறகு அவனை காணவே இல்லை. ஒரு நாள் வீட்டிற்கு செல்லும்போது பரமேஷும் இன்னொரு நண்பனையும் பார்த்தேன். மற்ற நண்பர்கள் பற்றியெல்லாம் பேசிய பின் தியாகுவின் பேச்சு வந்தபோது பரமேஷ் மீண்டும் ஒரு அதிர்ச்சி தந்தான்.


”தியாகு இறந்துட்டாண்டா கடல்ல குளிக்க போய் மூழ்கி இறந்துட்டாண்டா” “ஆனா அது இயற்கையான மரணமில்லை தற்கொலை ஏன்னா அவனுக்கு நல்லா நீச்சல் தெரியும்” “அதை விட முக்கியமான ஒரு விஷயம் அவன் இறந்த நாள் சரியா போன வருஷம் ரூபா இறந்த அதே நாள்!”


அன்றிரவு எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. என் இயலாமை குறித்து நொந்துகொண்டேன். என் தயக்கம், நண்பர்களிடம் சகஜமாக பழகாததற்காக வருத்தப்பட்டேன். இல்லையென்றால் நண்பர்களின் மரணம் கூட எனக்கு தெரியாமல் போகுமா?


அதன் பின் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம் தியாகுவின் வீட்டை தூரத்திலிருந்து பார்த்து கொண்டே போவேன். பரமேஷ் சொன்னதெல்லாம் பொய்யாக இருக்கும். என்றாவது ஒரு நாள் தியாகு வந்து பேசுவான் என எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்.


-------------------------

இந்த சம்பவம் எதை சொல்கிறது? காதலுக்காக உயிரை விட்டது முட்டாள்தனம்தான். தியாகுவிற்கு அந்த வயதில் ஏற்பட்டது வெறும் infatuation, attraction, பருவக் கோளாறு என சொல்லிக் கொண்டே போகலாம்!! ஆனால் அவன் மரணம் எதை குறிக்கிறது?

குமாருக்கு இந்த சம்பவம் மனதில் ஆழமாய் பதிந்து விட்டாலும், கால ஓட்டத்தில் இதனை மறந்துவிட்டான். ஆனால் 2 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் இதை இந்த நிகழ்வை அவனுக்குள் மீண்டும் கிளறிவிட்டது. அந்த சம்பவம்......

7 comments:

  1. நன்றாக ‌உள்ளது த‌ொடருங்கள். வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //Arun Prasath//
    மிக்க நன்றி!

    //வெறும்பய said...//
    நன்றி நண்பா!

    //பிரஷா said...//
    மிக்க நன்றிங்க!

    ReplyDelete
  3. ரொம்ப அருமையா எழுதுறிங்க.

    ReplyDelete
  4. காதல் அனுபவம் உண்டா! இருந்தால் அதனை வார்த்தையால் வடிக்க முடியாது . அனுபவித்துதான் ரசிக்க முடியும் . எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வருவதுதான் உண்மையான காதல்.
    இருபினும் சுவையான கட்டுரை தந்து உங்களை நேசிக்க வைத்தமைக்கு நன்றி .

    ReplyDelete