Monday, January 10, 2011

திரும்பி பார்க்கிறேன்............!

அத்தியாயம்  ஒன்று


கிபி. 1979. ஆகஸ்ட் 27.


அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான். மனம் ஏனோ அமைதியின்றி தவித்துக் கொண்டிருந்தது.


அரச குடும்பத்தில்தான் பிறந்தேன் நான். பல போர்களில் பங்கு கொண்டு நாட்டிற்காக போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளேன். பல பெருமை பெற்றேன். இதோ இப்போது எனக்கு 79 வயது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டேன். பேரன் பேத்திகள் என வாழ்க்கையும் விரிவடைந்து மகிழ்ச்சியாக உள்ளது.


வெளியே நான் மகிழ்ச்சியாக இருந்தபோதும் உள்ளுக்குள் இத்தனை காலம் வாழ்ந்ததற்கான திருப்தி இல்லை. ஏன்????


என் எதிரே இரண்டு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் முகத்தோற்றத்திலிருந்து அவர்கள் இந்தியர்கள் என புரிந்துகொண்டேன். இந்தியா! எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று! இந்தியாவுடனான என் நினைவலைகளில் மூழ்கிப் போனேன்.


கிபி. 1947. இந்தியா.


கிளமண்ட் அட்லி என்னை இந்தியாவின் வைஸ்ராயாக நியமித்தார். 1948க்கு முன் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்து விட வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிற்கு நான் குடும்பத்துடன் குடியேறினேன். அந்த நாட்டின் சூழ்நிலை எனக்கு மிகவும் பிடித்து போயிருந்தது. அவர்கள் தங்கள் சுதந்திரத்திற்காக கையாண்ட அஹிம்சா முறை என்னை வியப்பில் ஆழ்த்தியிருந்தது.


1947ல் போராட்டங்கள் அதிகமான காரணத்தால் மற்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுடன் கலந்து பேசி நான் சுதந்திரம் வழங்க முடிவெடுத்தேன். சில ஆட்சியாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் பிரிக்க வேண்டாம் என்றார்கள்.  பிரிட்டிஷ் ஆட்சியாளர் பிரிவினை வேண்டும் என்றார்கள். சில இந்திய தலைவர்களும் ஒப்புக்கொள்ள 1947, ஆகஸ்டு 15 இரவு இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. அந்த பிரிவினையை என் உள்மனம் தவறென சொன்னபோதும், என் வெளிமனம் சந்தோசப்பட்டது அப்போது. அதற்கு பிறகு இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மற்றும் முதல் கவர்னர் ஜெனரல் என்ற பெருமையோடு வெளிவந்தேன்.

மீண்டும் கிபி. 1979. ஆகஸ்ட் 27.

நினைவலைகளிலிருந்து வெளிவந்தேன். அந்த இந்திய சம்பவங்களுக்கு பின்னும் எத்தனையோ போர்கள், ஆட்சிகள், ஆக்கிரமிப்புகள்…. வாழ்க்கையில் அதனால் எத்தனையோ வெற்றிகளை நானும் என் நாடும் சம்பாதித்திருந்தது. அந்த போர்களினால் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருந்தபோதும் எத்தனையோ பேரின் கண்ணீர் இருந்திருக்கின்றது என்பதை உணர முடிந்தது. இதனால் எத்தனை ஆபத்துக்களும் வந்து கொண்டுதான் உள்ளது. இதோ இந்த அயர்லாந்து பகுதிக்கு வருவதுக் கூட ஆபத்தான ஒன்றுதான் என எச்சரித்த போதும் மன அமைதிக்காக வருடந்தோறும் இந்தப் பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.

என் எதிரே இருந்த அந்த சிறுவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் கொஞ்சம் பெரிதாக இருந்த ஒரு இந்தியச் சிறுவன் அவர்களிடம் எதையோ சொன்னான். அவர்கள் சண்டையை நிறுத்தி விட்டார்கள். நான் என் அருகிலிருந்த மொழிபெயர்ப்பாளரிடம் அவன் என்ன சொன்னான் என கேட்டேன். அவர் கூறினார்.

“ஏன் இப்படி சண்டைப் போட்டுக் கொள்கிறீர்கள்? வாழ்க்கையில் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள இரண்டு வழி உள்ளது. சண்டை மற்றும் அமைதி. சண்டையினால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானது மேலும் பல இழப்புகளும் துன்பங்களும் ஏற்படும். ஆனால் அமைதியால் கிடைக்கும் தீர்வு நிரந்தரமானது. இழப்புகள் குறைவானது. ஒற்றுமை நம்மிடம் இருக்க வேண்டும். ஒரு விரலின் பலத்தை விட ஐந்து விரல்கள் சேரும்போது அதிக வலிமை கிடைக்கும்!”

இந்த சிறிய வயதில் அவனின் முதிர்ச்சியை கண்டு வியந்தேன். என் மனம் அமைதியில்லாமல் இருப்பதற்கு காரணம் நான் செய்த சண்டைகள். அதன் நினைவுகள் என்னை அலைகழித்துக் கொண்டே இருக்கின்றது. வாழ்வில் மீண்டும் பிறந்தால் நான் ஆட்சி செய்த ஆக்கிரமித்த நாடுகளுக்குள் ஒன்றி பிறந்து அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் பாடுபட வேண்டும். என் மனதில் உறுதியாக எண்ணங்கள் தோன்றிக் கொண்டிருந்த அந்த நேரத்தில்……

”டமால்!”

கிபி. 1979. ஆகஸ்ட் 28.

முக்கியச் செய்தி: ”மௌண்ட் பேட்டன் பிரபு அயர்லாந்து நாட்டின் முல்லாஹ்மோர் பகுதியில் படகில் சென்று கொண்டிருந்த போது அயர்லாந்து ராணுவப்படை வைத்த வெடிகுண்டு வெடித்து காலமானார் அவருடன் படகில் சென்ற அரச குடும்பத்தினர் உட்பட………”


அத்தியாயம் இரண்டு


கிபி. 2011. ஜனவரி 7.

மாலை நேரம். அந்த அறைக்குள் நுழைந்தேன். அந்த அறையின் அமானுஷ்யம் என்னை பயமுறுத்தியது. மனதிற்குள் கலக்கம் வந்தபோது வேலை நிறைவேண்டியிருந்ததால் மனதை தைரியப்படுத்திக் கொண்டு சென்றேன். எதிரே அவர் அமர்ந்திருந்தார்.

“வணக்கம் சார்”

அவர் அமைதியாக புன்னகைத்தார். உட்காரச் சொன்னார்.

“உங்களுக்குத்தான் உங்க பூர்வ ஜென்மத்தை பற்றி தெரிஞ்சிக்கனுமா?”

“ஆமா சார். எப்படி சார் அதை பண்ணுவீங்க? எதாவது ஆவியை கூப்பிடுவீங்களா?”

அவர் மீண்டும் புன்னகைத்தார்.

“இல்லை. உங்கள் வெளிமனதை நன்றாக உறங்க செய்து ஆழ்மனதை தட்டி எழுப்புவோம். ஆழ்மனதில் படிந்துள்ள பூர்வஜென்ம ஞாபகங்கள், மறக்காத நினைவுகள் உங்களுக்கு நினைவிற்கு வரும்.”

அவர் பதில் சொல்லிவிட்டு ஒரு படுக்கை போன்ற அமைப்பில் என்னை படுக்கச் சொன்னார். பின்னர் ஏதோ பயிற்கள் செய்தார். எனக்கு கண்ணை சொருகிக் கொண்டு வந்தது. சிறிது நேரம் எங்கோ இருப்பது போன்ற உணர்வு. பிறகு திடீரென பல நினைவுகள் தோன்றின….

“அட்லாண்டிக் பெருங்கடலில் அந்த அயர்லாந்து கிராமத்தை நோக்கி அமைதியாக சென்று கொண்டிருந்தது படகு. அமைதியாக கடலை ரசித்துக் கொண்டிருந்தேன் நான்…………”

*************************


கண் விழித்தேன். வேறொரு உலகத்திலிருந்து வந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருந்தது. போன ஜென்மத்தில் நான் மவுண்ட்பேட்டன் பிரபுவா?? என்னால் நம்பவே முடியவில்லை. பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு தெளிவிற்கு வந்தேன். போன ஜென்மத்தின் இறுதியில் எடுத்த முடிவின்படி அமைதிக்காகவும் ஒற்றுமைக்காகவும் போராட வேண்டுமென்று.

அங்கிருந்து கிளம்பும்போது அந்த பயிற்சியாளர் கேட்டார்.

“எதற்காக நீங்கள் பூர்வஜென்மத்தை தெரிந்து விரும்பினீர்கள் என நான் தெரிந்துகொள்ளலாமா?”

“அது ஒன்றுமில்லை சார். என் வலையுலக நண்பர் அருண்பிரசாத் என்பவர் கடந்தகால நினைவுகளை பற்றி ஒரு தொடர்பதிவு எழுதச் சொன்னார் அதற்காகத்தான்”

- முற்றும் -

---------------------

பின்குறிப்பு 1:


சென்ற 2010 ஆரம்ப மாதங்கள் என் வேலைகள் சுறுசுறுப்பான காலகட்டம் அது. இருந்தபோதும் என் மனம் அமைதியின்றிதான் இருந்தது. மனதில் விரக்தியும் கவலைகளும் குடிகொண்டிருந்தன. மனதிற்கு மாற்றம் தேவைப்பட்டது. அப்போதுதான் வலைப்பூக்களில் மனதை திருப்பினேன். சிறிது நாட்களிலேயே எனக்கும் வலைப்பூ ஆரம்பிக்க ஆசை வந்தது. இப்படி வலையுலகம் மூலம் நான் பெற்ற நண்பர்கள் பலர்.

ஹாலிவுட் பாலா, கீதப்பிரியன், ஜோதிஜி, கருந்தேள், நாஞ்சில் பிரதாப், கொழந்த, சு.மோகன், டெனிம், RNS, Phantom mohan, காகி, கனவுகளின் காதலன், இலுமினாட்டி, இராமசாமி கண்ணன், மரா என ஆரம்பகாலத்தில் வலைப்பூக்களில் கிடைத்த நண்பர்கள் இவர்கள்.

பின்னர் ஒரு கும்பலாக கும்மியடித்துக் கொண்டிருந்த இவர்களுடன் சேர எனக்கு மிகவும் ஆசையாகவும் தயக்கமாகவும் இருந்தது. எப்படியோ சேர்ந்து இன்று இவர்களுடன் நித்தம் பொழுது சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள்: அருண், தேவா, பாபு, டெரர், ரமேஷ், ராம்சாமி, வெங்கட், மங்குனி, பட்டாபட்டி, சௌந்தர், செல்வா, ஜெயந்த், பிரசாத், மாதவன், பிஎஸ்வி, தில்லுமுல்லு, நாகராஜசோழன், சமீர், வினோ

என பெரிய பட்டாளமே உள்ளது. இன்னும் பிரியமுடன் ரமேஷ், பதிவுலகில் பாபு, ஆர்கேசதிஷ், சிபி, ஜில்தண்ணி, குத்தாலத்தான் என நிறைய பேர். சுபத்ரா, கௌசல்யா போன்ற சகோதரிகளையும் இந்த வலைப்பூ உலகத்தில் பெற்றுள்ளேன்.


இது தவிர இன்னும் ஏராளமான பேர் என் நண்பர்கள் என சொல்ல முடியும். பலரின் பேரை சொல்லாமல் இருந்திருக்கலாம். அதற்கு காரணம் அவர்கள் என்னை நண்பர்களாக நினைக்கிறார்களா என்ற தயக்கமே. ஒருவேளை நீங்கள் என்னை நண்பனாக நினைத்தால் உங்கள் பெயர் இங்கே சேர்த்துக் கொள்ளுங்கள்.

நான் அன்பு செலுத்தும் நண்பர்களுள் ஒருவர் ___________________________


எல்லோருடனும் நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டுள்ளது. அது என் வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என விரும்புகின்றேன்.



பின்குறிப்பு 2:



இது தொடர்பதிவு என்பதால் இதை தொடர நான் அழைப்பது காந்தி, நேரு, ஸ்டாலின், லெனின், ஆப்ரகாம் லிங்கன், இந்திரா காந்தி, சாக்ரடீஸ், ராஜராஜ சோழன், பாரதியார், விக்டோரியா மகாராணி, டயானா, இளங்கோவடிகள், முசோலினி, ஹிட்லர்...................................