Monday, October 25, 2010

காலப் புதிர்கள் - பாகம் ஒன்று

“இந்த பாடலோடு நான் விடைபெறுகிறேன்! அடுத்து வருவது இனிய கீதங்கள். ரசிச்சு ரசிச்சு கேளுங்க டெக்னோ எஃப் எம்” சந்தோசமாக கூறிவிட்டு தன் ஹெட்போனை கழற்றினான் ஆர்ஜே செல்வா.

இப்பவே நைட் மணி 11 ஆச்சா. கிளம்பனும், நிம்மதியா போய் தூங்கணும். என்றபடியே தன் பைக்கை ஸ்டார்ட் செய்து சாலையில் சென்று கொண்டிருந்தான். கும்மிருட்டு. சாலையின் யாருமில்லை தூரத்தில் யாரோ நிற்பதுபோல் தெரிந்தது அருகில் சென்றதும் அவர் லிஃப்ட் கேட்பது தெரிந்தது. நிறுத்தினான் பைக்கை.

உடனே சாலையில் இருந்தவன் திடீரென வேகமா வந்தான் கையில் எப்போது பேனாக்கத்தி முளைத்தது என்றே தெரியவில்லை. “ஒழுங்கா நான் சொல்ற இடத்துக்கு போ சத்தம்போட்டே அவ்வளவுதான்.” செல்வா அமைதியாக அவனை ஏற்றிக் கொண்டு வண்டியில் சென்றான்.

------------------------------

RHINO ELECTRONICS.  இரவிலும் கம்பீரமாக இருந்தது அந்த நிறுவனம். அதி நவீன எலக்ட்ரானிக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனம் அது. அங்கே ஒரு அறையில் மட்டும் அமைதியாக ஆனால் ஆழ்ந்த சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தார் அவர். அவர் முன்னால் இருந்த பெயர் பலகை அவர் பெயர் பாண்டியன் எனவும் அவர் அந்த நிறுவனத்தின் எம். டி என்பதையும் சொல்லிற்று. அவர் மனதில் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தது.

”வாழ்வில் என்ன சாதித்தோம். இந்த நிறுவனம் கூட என் தந்தை உருவாக்கியதுதானே. ஒரு விஞ்ஞானியாக இருந்தாலும் 5 வருடமாக முயற்சித்தும் என்னால் நான் நினைத்த கண்டுபிடிப்பை உருவாக்க முடியவில்லையே” அவர் தான் தொகுத்த விவரங்களை தன் லேப்டாப்பில் மீண்டும் ஒரு முறை பார்த்தார். அதில் TIME MACHINE என்ற கோப்பை திறந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு அவர் முகத்தில் பிரகாசம். வேகமாக எழுந்தார்.

-------------------------------------

டிஎஸ்பி ராம்சாமி டென்சனோடு காத்திருந்தார். அவரிடம் டிஜிபி மங்குனி சொல்லியது ஞாபகம் வந்தது.....

”மிஸ்டர் ராம்சாமி உங்களுக்கு 3 நாட்கள் டைம். அதுக்குள்ளே இவனை பிடிச்சாகனும். நம் உளவுத்துறை ரிப்போர்ட்படி ஏதோ ஒரு டீலிங்காக 2 நாளைக்கு முன்னாடி இங்கே வந்துருக்கான். அவன் எங்க இருக்கான்கிறதை கண்டு பிடிப்பது உங்க பொறுப்பு.”

2 நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அவனைப் பற்றி விவரங்களை கண்டு பிடித்தார். இப்போது கூட அவனிருக்குமிடம் பற்றி ஒரு இன்ஃபார்மர் மூலம் தெரிந்துகொள்ளத்தான் தன் அசிஸ்டென்ஸ்கள் சவுந்தர் மற்றும் பாபுவை அனுப்பியிருந்தார். தன் முன் இருந்த ஃபைலை ஒருமுறை திறந்தார். அதில் போட்டோ விவரங்கள் இருந்தது. பெயர்: ரமேஷ் தொழில்: புரொஃபஷனல் கில்லர்.

திடீரென போன் ஒலித்தது. எடுத்தார். “சார் நான் சவுந்தர் பேசறேன். அவன் எங்க இருக்கான்னு கண்டுபிடிச்சிட்டோம்.”

---------------------------------------

செல்வா வண்டி நிறுத்திய இடம் ஒரு ஆடிட்டோரியம் அங்கே ஏற்கனவே ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் பைக்கிலிருந்தவனை ”ஏண்டா ஜெயந்த் ஏன் லேட்” என்றான். ”வண்டி பஞ்சர் ஆயிடுச்சு அதான் லிஃப்ட் கேட்டு வந்தேன்” என்றான்.
இதுக்கா கத்தி வைச்சே என்று கேட்டான் செல்வா. சாரிங்க அவசரம் அதான்! என்றான் ஜெயந்த. ”டேய் யோகேஷ் நிகழ்ச்சி முடிஞ்சிடுச்சா” ”முடிகிற நேரம்தான்”

ஆடிட்டோரியம் உள்ளே....

“வாழ்க்கையும் ஒரு கவிதைதான்
பல சமயங்களில் புரிவதே இல்லை.” தேவா பேசி முடித்ததும் கரகோஷம் விண்ணை தொட்டது. கவிஞர் தேவாவிற்கு இந்த பொன்னாடையை போர்த்துகிறேன் என ஒருவர் பொன்னாடை போர்த்தினார். புத்தக வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு வெளியே வந்தார் கவிஞர் தேவா.

அவரிடம் பலர் ஆட்டோகிராஃப் வாங்கினார்கள். கடைசியாக ஜெயந்தும், யோகேஷும் சென்றார்கள்.
“சார் என்னை தெரியுதா” என்றான் யோகேஷ்.
தேவா யோசித்துவிட்டு, “ஆ! ஞாபகம் வந்துவிட்டது போனதடவை நான் இந்தியா வந்தப்ப எனக்கு ஆக்ஸிடெண்ட் ஆச்சு அப்ப ரத்தம் கொடுத்தவன்தானே நல்லாயிருக்கியா தம்பி”
“நல்லாயிருக்கேன் சார் இவன் என் ஃபிரெண்ட் ஜெயந்த் உங்களின் தீவிர ரசிகன் உங்களை பார்க்கணும்னு ஆசைப்பட்டான்.”
ஜெயந்த் ஆவலாக அவரின் கைப்பற்றினான்.

செல்வா தூரத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வண்டியை கிளப்பினான். என்ன ஒரு விநோதம் ஒரு கவிஞரை பார்க்க துடிக்கும் ரசிகன் அவரை பார்க்க வேண்டி கத்தி காட்டி லிஃப்ட் கேட்கிறான். உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே வண்டியெடுத்தான் செல்வா.

--------------------------------------------

பாண்டியன் அந்த அறையில் நுழைந்தார், அங்கே இருந்த ஒரு கணிணி பலகையில் சில எண்களை தட்டினார். அருகிலுள்ள கதவு திறந்தது. உள்ளே நுழந்தார்.

எதிரே ஒரு பிரம்மாண்டா கருவி அதன் நடுவில் மெல்லியதாக Time Machine என்ற எழுத்துக்கள். அதில் நடுவே ஒரு நாற்காலில் அதன் கைப்பிடியில் எடுத்து மாட்டிக்கொள்ள ஒரு ஹெட்போன் போன்ற அமைப்பு இருந்தது அதனை மாட்டினால் கண்களையும் அது மூடும். பக்கவாட்டில் ஒரு கணிணி போன்ற அமைப்பு அதில் Time, Picture, Place என மூன்று பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தன. தன் கையில் வைத்திருந்த சிடியை அதில் ஒரு இடத்தில் பொருத்தி சில வேலைகள் செய்தார். Time, Picture, Place என மூன்று பகுதிகளிலும் விளக்கு எரிந்தது.

யுரேகா என கத்த வேண்டும் போல் இருந்தது. இத்தனை நாளாக அந்த மூன்று பகுதிகளும் இணைந்தாற் போல் வேலை செய்யவில்லை ஒன்று இயங்கினால் ஒன்று இயங்காமல் இருந்தது. ஆஹா என் கனவு நிறைவேறி விட்டதா டைம் மெஷின் ரெடியாகி விட்டதா மனமெல்லாம் ஒரே மகிழ்ச்சி சிறுவன் போல குதித்தார். சரி இப்போது இதை சோதிக்க வேண்டுமே சரி.அன்றைய தேதி 10 நிமிடங்களுக்கு முந்தைய நேரத்தை Time என்ற இடத்தில் உள்ளீடு செய்தார். Place என்ற இடத்தில் கம்பெனி இருக்கும் ஏரியாவான போரூர் என்பதை உள்ளீடு செய்தார். ஹெட்போனை மாட்டினார். நாற்காலியின் மறு கைப்பிடியில் இருந்த குமிழை அழுத்தினார்.

கண்கள் மூடியிருந்த்து. தலைக்குள் ஏதோ சர் என்று பாய்வது போல உணர்வு. திடீரென படம் போல காட்சி தெரிந்தது. பாண்டியன் சேரில் உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருந்தார். ஹெட்போனை கழட்டினார். நம்பமுடியவில்லை அவரால். பத்து நிமிடங்களுக்கு முன் அவர் இருந்த நிலை அதுவல்லவா!!!
சரி! இன்னொன்றை சோதித்து பார்ப்போம். எதை? தீடிரென அவர் தன் இடுப்பை தொட்டுப் பார்த்தார் தழும்பு.

அவரின் பழைய ஞாபகங்கள். அவரும் அவர் சகோதரணும் இரட்டை பிறவிகள் ஒட்டிப் பிறந்தவர்கள் ஆபரேசன் மூலம் பிரித்தார்கள். குழந்தை பிறந்த ஒரு வருடத்தில் தாயும் தந்தையும் பிரிந்து விட்டார்கள். தாய் சில வருடங்களில் இறந்தது மட்டும் தெரியும். ஆனால் சகோதரன் என்ன ஆனான் என்றே தெரியவில்லை. தந்தை முயற்சித்தும் பலனில்லை கடைசி நாட்களில் இதை எண்ணி அவர் புலம்பியுள்ளார். கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டார்.

தன் சகோதரன் எங்கிருப்பான். ஒரு யோசனை. தன் பிறந்த நாளையும். தான் பிறந்த ஆஸ்பத்திரி இருந்த இடத்தையும் மிஷினில் எழுதினார். பிறகு பார்த்தார். அதேபோல் நிகழ்படங்கள். இருகுழந்தைகள் ஒட்டிப்பிறந்தன. பார்த்துக் கொண்டே இருந்தபோது திடீரென ஸ்பார்க் ஆகிற்று கருவி. கருவியில் காலம் இடம் தானாக மாறியது. உடனே எங்கெங்கோ நிகழ்வுகள் சென்றது கடைசியாக ஒரு ஒளிப்படம் அவர் முன் தோன்றியது. அதில் ஒருவர் ஒரு இளைஞனை சுடுகிறார் குண்டு அந்த இளைஞன் மீது படுகிறது. அவ்வளவுதான் தீடீரென ஒரு சத்தம். கருவி வேலை செய்யவில்லை.

ஹெட்போனை கழட்டினார். ஏதேதோ செய்தார். பலனில்லை. அவருக்கு என்னவோ போல் இருந்தது. சகோதரன் பற்றிய எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. புதிதாக யாருக்கோ ஆபத்து என்று வேறு காட்டுகிறது. கருவிக்கும் ஏதோ ஆகிவிட்டது. அப்போதைய மனநிலையில் எதையும் செய்யமுடியும் என தோன்றவில்லை. வீட்டுக்கு கிளம்பினார்.  அந்த கருவியில் Time என்ற இடத்தில் அடுத்த நால் தேதியும் Place என்ற இடத்தில் அவர் கம்பெனி இருந்த பகுதி பெயரும் இருந்தது இதை பாண்டியன் கவனிக்கவில்லை.

--------------------------------------------------------------

செல்வா பைக்கில் வந்துகொண்டிருந்தான். திடீரென பைக் நின்று விட்டது. சே இதான் இந்த பைக்கோட என்று புலம்பி கொண்டே இறங்கி வண்டியை சோதித்தான். அப்படியே அவன் இருந்த தெருவுக்கு எதிரே செங்குத்தாக ஒரு தெரு சென்றது. அவன் அங்கே பார்த்துக் கொண்டே வண்டியில் ஒயரை பிரித்த போது....
யாரோ ஒருவன் வெகு வேகமாக ஓடி வந்தான். பின்னால் ஒரு முறை திரும்பி பார்த்தான் பிறகு அங்கிருந்த காம்பவுண்ட் சுவரை தாண்டி உள்ளே குதித்தான். செல்வா அதிர்ச்சியோடும் ஆச்சரியத்தோடும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே 3 பேர் பின்னாலே ஓடி வந்தனர். அவர்கள் உடையிலேயே போலீஸ் என தெரிந்தது.

செல்வாவுக்கு பயம் வந்தது. முதலில் ஓடியவன் வேறு பக்கம் இருந்ததால் செல்வாவை பார்க்க வாய்ப்பில்லை. ஆனால் போலீஸ்...

”பாபு நீங்க இந்த பக்கம் போங்க, சௌந்தர் நீங்க இந்த பக்கம் போங்க தேடுங்க அவனை சே மிஸ்ஸாயிட்டான்” என கோபப்பட்டார் ராம்சாமி.

செல்வா பயந்து என்ன சொல்வது என யோசிக்கும்போதே சௌந்தர் அருகில் வந்தார்.
”யாருப்பா நீ”
”சார்.. நான்.. சும்மா.. பைக் ரிப்பேர்..” தடுமாறினான் செல்வா.
”சரி இங்கே யாராவது ஓடி வந்ததை பார்த்தியா”
செல்வா பயந்தான் பார்த்தேன் என்று சொன்னால் அந்த திருடனாலும் நாளை பிரச்சினை வரலாம். போலிஸும் அடிக்கடி வரச்சொல்லும். ”பார்க்கலை சார்...”
”ம் சரி போ” சவுந்தர் சந்தேகத்தோடே செல்வாவை பார்த்துக்கொண்டே அவனை தாண்டி வேறு பக்கம் ஓடினார்.

செல்வாவிற்கு உயிர் வந்தது. பைக்கை ஸ்டார்ட் செய்தான். இப்போது அந்த திருடன் அந்த காம்பவுண்ட் உள்ளேதான் இருப்பான்ல. அவனுக்குள் ஒரு திரில் பயன், பைக்கை மெதுவாக ஓட்டிக் கொண்டே அந்த காம்பவுண்டை தாண்டிச் சென்றான். செல்லும்போது அந்த கட்டிடத்தின் பெயரை படித்தான்.

RHINO ELECTRONICS.

3 comments:

  1. வாழ்த்துகள் எஸ்.கே!!

    ReplyDelete
  2. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... //
    நன்றி! நன்றி!

    //TERROR-PANDIYAN(VAS) said... //
    மிக்க மிக்க நன்றி!

    ReplyDelete